கோயம்பேடு சந்தையில் டன் கணக்கில் குப்பையாக குவிக்கப்படும் வெளிநாட்டு வெங்காயம்: வாங்க ஆளில்லாததால் அழுகி வீணாவதாக வியாபாரிகள் கவலை!

சென்னை: உள்நாட்டு வெங்காய உற்பத்தி சீரடைந்துவிட்டதால் சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் வாங்க ஆளின்றி குப்பையில் வீசப்பட்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டதால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, எகிப்து, துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்தது. அதேபோல தனியார் நிறுவனங்களும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது உள்நாட்டில் வெங்காய உற்பத்தி வழக்கமான அளவுக்கு திரும்பி விட்டாலும், வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்வது தொடர்கிறது.

ஆனால் உள்நாட்டு வெங்காயத்தை போல சுவை இல்லாததால் அதை வாங்குவதில்லை என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு வெங்காயத்தை விட கூடுதல் விலையுடனும், வெளிநாட்டு வெங்காயம் விற்கப்படுவதால் வாங்க ஆளில்லை. இதனால் முளைவிட்ட வெங்காய மூட்டைகள் கோயம்பேடு வெங்காய சந்தையில் கேட்பாரற்று கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வெங்காய இறக்குமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் உள்ளூர் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories: