கொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு

புதுடெல்லி: தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,858 ஆக உயர்ந்துள்ளது. 78,000க்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ள ஈரான், இத்தாலி, தென்கொரியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 189 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டவர்கள் இந்தியா வர தற்காலிக தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்விரு நாடுகளிலும் கரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா விசாவில் வருபவர்களை மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனங்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: