×

கொரோனா பயத்தால் தள்ளி வைக்கப்படும் போட்டிகள்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பயத்தால் விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைப்பது தொடர்கதையாகி வருகின்றன. கொரோனா வைரஸ் அச்சத்தால் சீனாவுடனான போக்குவரத்தை உலக நாடுகள் முடக்கி வைத்துள்ளன. அந்த நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று பேட்மின்டன் போட்டிகள் சில நாட்களுக்கு முன்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தாலியின் அஸ்சிசி  நகரில் நாளை தொடங்க இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி  தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம்(ஏஐபிஏ) அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் முகமது, ‘அஸ்சிசி நகரில் நடைபெற இருந்த குத்துச்சண்டை போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். அதன்பிறகு போட்டி நடத்துவது குறித்து முடிவு  செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.இத்தாலியில் கொரோனா வைரசால் 400க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12பேர் உயிரிழந்துள்ளனர்.ஒலிம்பிக் நடக்கும்- கிரண் ரிஜ்ஜூ: சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர் டிக் பவுண்ட், ‘ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பிரச்னை மே மாதத்திற்கு முன்பு கட்டுக்குள் வரவில்லை என்றால் ஜப்பானில் நடைபெற உள்ள ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறியுள்ளார்.

அதற்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ நேற்று, ‘கொரோனா வைரஸ் பிரச்னை சீனாவில்தான் இருக்கிறது. ஜப்பானில் இல்லை. அதனால் இந்த ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும். அதற்காக  எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Competitions , Corona, contests
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி