தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை? கேரளாவில் ஆயுதப்படை எஸ்ஐ கைது

திருவனந்தபுரம்: கேரள  மாநில போலீஸ் ஆயுதப்படை முகாம்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  துப்பாக்கி தோட்டாக்கள்,  25 அதிநவீன துப்பாக்கிகள் மாயமானது மத்திய  கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான  தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை  செய்யப்பட்டு  இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி  எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க  குற்றப்பிரிவு போலீசுக்கு அரசு உத்தரவிட்டது. குற்றப்பிரிவு ஏடிஜிபி  டோமின்தச்சங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி   வருகின்றனர்.  விசாரணையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் பேரூர்கடை ஆயுதப்படை முகாமில்  ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது 350 போலி துப்பாக்கி தோட்டாக்கள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல்போன தோட்டாக்களுக்கு பதிலாக போலி  தோட்டாக்கள் வைத்தது  தெரியவந்தது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் போலி  தோட்டாக்கள் வைத்தது  அங்கு பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ரிஜி (52) என்பது  தெரியவந்தது. தற்ேபாது பத்தனம்திட்டாவில் உள்ள அடூர்  ஆயுதப்படை  முகாமில் பணிபுரிந்து வருகிறார். போலீசார் அவரை கைது செய்து   திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆயுதப்படை  முகாமில் இருந்து மாயமான  துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தீவிரவாத  கும்பல்கள் அல்லது மாவோயிஸ்ட்டுகளுக்கு சப்ளை செய்தாரா என விசாரணை நடந்து  வருகிறது.

Related Stories: