ஜாலியன் வாலாபாக் முக்கிய சாட்சியாக இருந்த 123 வயது தியாகி சுதாகர் சதுர்வேதி காலமானார்

பெங்களூரு: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தின் முக்கிய சாட்சியாக இருந்தவரும்,  நாட்டின் மூத்த சுதந்திர போராட்ட தியாகியும் மகாத்மாகாந்தியின் நெருங்கிய நண்பருமான சுதாகர்  சதுர்வேதி (123) முதுமையின் காரணமாக  பெங்களூருவில் நேற்று  காலமானார்.பெங்களூரு பலேபேட்டையில் கடந்த 1897 ஏப்ரல் 20ம் தேதி  பிறந்தவர் சுதாகர்.  கடந்த 1919ம் ஆண்டு நடந்த  ஜாலியன் வாலாபாக்  போராட்டத்தில் சுதாகர் சதுர்வேதியும் கலந்து கொண்டார். போராட்டத்தின் முழு விவரம்  தெரிந்த ஒரே நபராக  சதுர்வேதி இருந்தார். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் பேர்  படுகொலை செய்யப்பட்டிருந்தும் பிரிட்டீஷ் அரசு 670 பேர் மட்டுமே  உயிரிழந்ததாக தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு லண்டனில் நடந்தபோது, சாட்சி  கூறியவர்களில் சதுர்வேதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சுதந்திர  போராட்டத்தில் பங்கேற்று 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியின்  நண்பர், ஆலோசகராக  மட்டுமில்லாமல் அவரின் ஸ்டெனோ கிராபராகவும்  இருந்துள்ளார்.இப்படி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடம்  பிடித்திருந்த சுதாகர்லால் சதுர்வேதி, பெங்களூரு ஜெயநகரில்  குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 123 ஆண்டுகள் வாழ்ந்த ஒரே சுதந்திர  போராட்ட தியாகி என்று போற்றப்பட்ட  அவர் நேற்று அதிகாலை  முதுமையின் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு முன்னாள் லோக்ஆயுக்தா  நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். அவரது உடல்  நேற்று சாம்ராஜ்பேட்டையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: