பீகாரில் 2021ல் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் தீர்மானம்

பாட்னா: பீகாரில் 2021ல் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான  தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பீகாரில்  முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது. இதன் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. நிதி  அமைச்சர் சுஷில் குமார் மோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதற்கிடையே,  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி தேசிய குடியுரிமை திருத்த  சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்), தேசிய குடிமக்கள்  பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை குறித்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது  விவாதம்  நடத்த கோரினார்.இதையடுத்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பேசிய  முதல்வர் நிதிஷ் குமார், ``எந்தவொரு சூழலிலும் பீகாரில் என்ஆர்சி.யை அமல்படுத்த மாட்டோம்.  என்பிஆர்.ஐ பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களும்  ஒப்புக் கொள்ளும் பட்சத்தில்  சாதி வாரி  கணக்கெடுப்புக்கான புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும்’’ என்றார். இதனைத் தொடர்ந்து, என்ஆர்சி.க்கு எதிராக ஒருமனதாக  தீர்மானம் நிறைேவற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை  கூடியதும் சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி, 2021ல் சாதி வாரி மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்த ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவையில்  தெரிவித்தார். பின்னர், முதல்வர் நிதிஷ்  குமார் பேசியதாவது:

கடந்த  1931ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்னர்  பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்  தொகை அதிகரித்துள்ளது. ஆனால், இவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வரம்பு 50  சதவீதமாக  உள்ளது. இது தொடர்பான விவரங்களை 1931ம் ஆண்டு மக்கள்தொகை  கணக்கெடுப்பில் இருந்து மட்டுமே பெற முடியும். இது போன்ற சூழ்நிலையில்,  சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பே சிறந்த தீர்வாகும். வரும் 2021ல்  எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக, இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தகவல்களையும் கொண்டதாக இருக்கும். இந்த  மக்கள் தொகை கணக்கெடுப்பில்,  வீடு, வரைபடம் அல்லது புவி குறியீடு  ஆகியவற்றை பயன்படுத்துவது பரிசீலிக்கப்பட உள்ளது. இதில் துல்லியமான  தகவல்கள் சேகரிக்கப்படுவதை உறுதி செய்ய, முறையான பயிற்சி அளிக்கப்பட்ட 25 லட்சம் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: