அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாலியல் தொழிலுக்கு சிறுமியை காரில் கடத்திய வாலிபர் கைது: சினிமா பாணியில் மீட்ட சகோதரன்

சென்னை: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிறுமியை பாலியலுக்கு காரில் கடத்திய வாலிபர்களிடம் இருந்து, சினிமா பாணியில் அவரது சகோதரன் மீட்டுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் கார் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமி ஒருவரை 2 வாலிபர்கள் காரில் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது டாடா மேஜிக் வாகனத்தை ஓட்டி வரும் வாலிபர்  (சிறுமியின் சகோதரன்) சவாரிக்காக மெட்ரோ ரயில் நிலையம் முன்பு வாகனத்தை நிறுத்தினார். பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டுனர் சுற்றி பார்த்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த காரில் தனது தங்கை போன்று ஒருவர் அமர்ந்து இருப்பதை பார்த்த அவர், சந்தேகத்தின்படி அந்த காரின் அருகே ெசன்று பார்த்தார்.

 அப்போது, காரில் இருந்தது தனது தங்கைதான் என்று தெரிந்தது. உடனே வீட்டில் இல்லாமல் இங்கு என்ன செய்கிறாய் என்று தனது தங்கையிடம் பேசியபடி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும், ‘நாங்கள் பணம் கொடுத்து இந்த பெண்ணை பாலியலுக்கு அழைத்து செல்கிறோம்’ என கூறி உள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த வாலிபர், உடனே அவர்களிடம் தகராறு ெசய்து தனது தங்கையை  மீட்க முயன்றார். இதனால் வாலிபர்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை  பாலியல் தொழிலுக்கு அழைத்து செல்ல இரண்டு வாலிபர்கள் முயன்றது தெரியவந்தது. உடனே காரில் இருந்து இரண்டு வாலிபர்களும் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினர்.போலீசார் இருவரில் பிரகாஷ் என்ற வாலிபரை பிடித்தனர். பைசல் என்பவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, சிறுமியின் சகோதரனான டாடா மேஜிக் ஓட்டுனர் அளித்த புகாரின்படி சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொழிலுக்கு அழைத்து செல்ல முயன்ற பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கார் மற்றும் ஒரு அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பிரகாஷிடம் யாரிடம் பணம் கொடுத்துவிட்டு சிறுமியை பாலியலுக்கு அழைத்து செல்ல முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: