நெய்வேலியில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு வாட்ஸ்அப்பில் சிறுவன் வதந்தி : கவுண்டமணி பாணியில் பரப்பியதால் கைது

நெய்வேலி: பழைய படம் ஒன்றில் கவுண்டமணி, விற்பனைக்கு வந்துள்ள தேங்காயில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பி விடுவார். அதுபோல ஒரு கடையில் வாங்கிய சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சிறுவன் வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பி கைதாகி உள்ளான்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 29ல் உள்ள தனியார் சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் வைரலானது. இதனால் சிக்கன் கடை பக்கமே யாரும் வரவில்லை. நெய்வேலியில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களிடம் பரவிய இந்த தகவலால் மனரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனியார் சிக்கன் சென்டர் உரிமையாளர் பக்ருதீன்அலிமுகம்மது என்பவர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், ‘‘தனது கடையில் நெய்வேலி வட்டம் 21ஐ சேர்ந்த 17 வயது சிறுவன் அடிக்கடி சிக்கன் வாங்கிக் கொண்டு பணம் தராமல் தகராறு செய்து வந்ததார். நான் கடன் தராததால் என் கடை மீது களங்கம் ஏற்படுத்த நடிகர் கவுண்டமணி நடித்திருக்கும் உதயகீதம் பட பாணியில் தேங்காய் விலை அதிகமாக இருந்ததால் தேங்காயில் பாம்(குண்டு) உள்ளதாக வதந்தி பரப்புவார். தேங்காய் விலையும் வீழ்ச்சியடையும். அதுபோன்று இந்த சிறுவன், தனது வாட்ஸ்அப் மூலம் சிக்கன் கறியில் கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தியை பரப்பி உள்ளார். இதனால் எனது வாடிக்கையாளர்களும், குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.  எனவே அந்த சிறுவன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் சிறுவன் மீது, தவறான தகவலைப் பரப்புதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் அவன், தவறான தகவல் பரப்பியதாக கூறிய வீடியோவும் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

Related Stories: