குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:

இந்தியாவை முறைப்படுத்தப்பட்ட நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால், நாடு முழுவதும் திட்டமிட்டு போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது. இஸ்லாமிய மக்களும், நாமும் சகோதரர்களாக உள்ளோம். குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்குள்ள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக கூறி இருக்கிறார்.

முஸ்லிம்கள் வசிக்கும் சில இடங்களில் போலீசார், உளவுத்துறை அதிகாரிகள் கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. அங்கு யார் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் எல்லா இடங்களுக்கும் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். நான் கடந்த 2010ம் ரத யாத்திரை சென்றேன். அப்போது கீழக்கரையில் என்னை உள்ளே விடவில்லை. பிரதமராக பதவியேற்றவுடன் நான் 130 கோடி மக்களுக்கு முதல் வேலைக்காரன் என்று மோடி கூறினார். எனவே இரும்புக்கரம் கொண்டு மக்களை ஒடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் மென்மையாக, நாசுக்காக செயல்படுகிறார். தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: