×

ரெட்டியார்சத்திரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு பார்சலாகும் முருங்கைகாய்கள்

சின்னாளபட்டி: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் தினமும் அதிகளவில் முருங்கைகாய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சத்திரம், சில்வார்பட்டி, ஜி.நடுப்பட்டி, முருநெல்லிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்  ஒட்டுரக முருங்கையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் உள்ள முருங்கை மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் காய்கள் வரத்து குறைவாக உள்ளன. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஜெயங்கொண்டான், ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கும்பகோணத்திலிருந்து கரும்பு முருங்கை மற்றும் நாட்டு முருங்கை புதுச்சத்திரத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு காய்களை தரம் பிரித்து 50 கிலோ மற்றும் 100 கிலோ கொள்ளளவுள்ள சாக்குப் பைகளில் அடைத்து லாரிகள் மூலம் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை முருங்கைக்காய் விலைபோகிறது. இதுகுறித்து முருங்கைக்காய் வியாபாரி அழகர்சாமி கூறுகையில், ‘‘தற்போது இப்பகுதியில் காய்கள் வரத்து குறைவாக இருப்பதால், ஆண்டிபட்டியிலிருந்து அதிகளவில் கரும்பு முருங்கை காய்கள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அவற்றை பேக்கிங் செய்து வடமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் காய்கள் வரத்து தொடங்கியவுடன் முருங்கைக்காய்களின் விலை குறைந்து விடும்’’ என்றார். தமிழகத்தில் உற்பத்தியாகும் முருங்கைக்காய்கள் தனி ருசியுடன் இருப்பதால், வடமாநிலங்களில் தமிழக முருங்கைக்காய்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Parrotheads ,Rettiarshtra ,Northern Territories , Rettiyasatram, Northern Territories, Drumsticks
× RELATED வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள்...