உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு..: இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை  புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertising
Advertising

அப்போது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி அலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 ஆலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பொதுபணித்துறை தலைமை பொறியாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தபடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மேலும், அனுமதியின்றி செயல் படக்கூடிய குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர். இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால், அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி வெளியிட்ட அறிவிப்பில், இன்று மாலை முதல் குடிநீர் ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை எடுக்கிறோம் என்றும் முரளி தெரிவித்துள்ளார். மேலும், மற்றத் தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒருசேரப் பார்க்கக் கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: