இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்து இயக்குனர் சங்கர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்து தொடர்பாக படத்தின் இயக்குனர் சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கமல்ஹாசன் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்த நசரத்பேட்டையில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது, ராட்ச கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக லைக்கா திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் உட்பட 4 பேர் மீது நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இணை இயக்குநர் பரத்குமார் அளித்த புகாரில் லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுத் துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நேர்ந்த இடத்தில் தானும் இயக்குநர் சங்கரும் இருந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.இது குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரேன் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரிடம் இருந்து இதுவரை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே, விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். காவல் ஆணையர் விஸ்வநாதன் முன்னிலையில் மத்தியக் குற்றப்பிரிவினர் இயக்குநர் சங்கரிடம் விசாரணை நடத்தினர். தொழில்துறைக்குப் பயன்படுத்தும் கிரேனைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியது தொடர்பாக இயக்குநர் சங்கரிடம் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளது.விபத்து நடந்தது குறித்து சுமார் 2 மணி  நேரத்திற்கும் மேலாக சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: