உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்..: 6வது இடத்தில் இந்தியா!

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. உலக அரங்கில் முக்கியமான முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ், உலக நாடுகளின் சொத்து அறிக்கையின் 10வது பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற அறிக்கை வெளியிடுவது அந்நிறுவனத்தின் வழக்கம் ஆகும். மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் எண்ணிக்கை, அவர்கள் வைத்திருக்கும் சொத்துகளின் விகிதம் மற்றும் உலகளவில் சமத்துவமின்மையின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு நாட்டின் செல்வத்தின் வளர்ச்சி மற்றும் விநியோகம் இரண்டையும் இந்த அறிக்கை கணிக்கிறது. இந்த நிறுவனம் சொத்து என்பதை ஒரு நபரின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் வரையறுக்கிறது. பணம், நிதிச் சொத்துகளின் மதிப்பு மற்றும் வீடுகளின் உண்மையான சொத்துகளின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் ஒரு தனிநபரின் கடன்களைக் கழித்தும் கணக்கிடுகிறது.

மேலும், இந்த நிறுவனம், உலகின் மொத்த பணம் 360.6 டிரில்லியன் டாலர் என்று கூறுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் கொண்ட அமெரிக்கா முதலிடத்திலும், 63.8 ட்ரில்லியன் டாலர் கொண்ட சீனா 2வது இடத்திலும், 25 ட்ரில்லியன் டாலர் கொண்ட ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக 14.7 ட்ரில்லியன் டாலர் கொண்ட ஜெர்மனி 4வது இடத்திலும், 14.3 ட்ரில்லியன் டாலர் கொண்ட இங்கிலாந்து 5வது இடத்திலும், 12.6 ட்ரில்லியன் டாலர் கொண்ட இந்தியா 6வது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தடியாக, 8.6 ட்ரில்லியன் டாலர் கொண்ட கனடா 7வது இடத்திலும், 7.3 ட்ரில்லியன் டாலர் கொண்ட தென் கொரியா 8வது இடத்திலும், 7.2 ட்ரில்லியன் டாலர் கொண்ட ஆஸ்திரேலியா 9வது இடம் மற்றும், 3.9 ட்ரில்லியன் டாலர் கொண்ட ஸ்விட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.

Related Stories: