பீகாரைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பீகார் மாநிலத்தை போல் தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ராமதாஸ், பாமகவின் நிலைப்பாடும் இதுதான் என்று கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகவும் போராட்டம் நடந்து வருகிறது. பல மாநிலங்கள் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. பீகார் சட்டமன்றத்தில் கடந்த 25ம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மேற்கு வங்கம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பீகாரைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2010ம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தை தவிர வேறு மாநிலத்தில் NRC தயாரிக்கப்பட்டது என பிரதமர் கூறியிருப்பதை வரவேற்றுள்ள அவர், தமிழகத்தில் NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக முதல்வர் கூறியிருப்பது சரியான நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான அச்சத்தை அரசு போக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: