தெலுங்கானாவில் மகளின் தற்கொலைக்கு காரணம் கேட்டு போராடிய தந்தை மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்

பதன்சேரு: தெலுங்கானாவில் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் கேட்டு போராடிய தந்தையை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பதன்சேருவில் உள்ள ஜூனியர் தனியார் கல்லூரி விடுதியில் சந்தியா ராணி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மனஅழுத்தம் காரணமாக சிறுமி மனச்சோர்வு அடைந்து, உடல்நிலை சரியில்லாமல் போனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்கொலை செய்துகொண்ட மகளின் உடலை பார்க்க வந்த தந்தை, மகளின் தற்கொலைக்கான காரணம் கேட்டு போராடினார்.

அப்போது, மாணவியின் தந்தையை உதைத்து கேட்டுக்கு வெளியே தள்ளிய காவல்துறையினர் தரதரவென இழுத்து அவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து பெண்ணின் உடலை கைப்பற்றி சாலை மறியல் செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கவே காவல்துறையினர் தாக்கியதாகவும், இருப்பினும் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் ஆணையர் கூறியுள்ளார். இந்த வீடியோவை இணையதளங்களில் பலர் கண்டனத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், இவ்விகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாத மாணவியை, கல்லூரி விடுதி விடுதி நிர்வாகம் வீட்டிற்கு செல்ல அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: