ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்

ஹாலிவுட் சினிமா உலகின் ‘கனவு கன்னி’ நடிகை எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் இன்று. இவர் வட-மேற்கு லண்டனின் ஹாம்ஸ்டெட்டில் 1932ம் ஆண்டு பிப்.27ம் தேதி பிறந்தார். பிரான்சிசு லென் டெய்லர்-சாரா வையோலா வார்ம்ப்ரோடட் ஆகியோரின் இரண்டாவது மகள் ஆவார். இவரது பெற்றோர் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த அமெரிக்கர்கள் ஆவர். இவருடைய தந்தை ஒரு கலைப்பொருள் விற்பன்னராக இருந்தார். இவருடைய தாய் ஒரு முன்னாள் நடிகையாவார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என இருநாட்டு குடியுரிமை பெற்றவர் எலிசபெத்.

Advertising
Advertising

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர், போர் நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு அவருடைய பெற்றோர் அமெரிக்காவிற்கு திரும்பிவிட முடிவுசெய்தனர். இவர்கள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியமர்ந்தனர். எலிசபெத் டெய்லர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பேசும்படமான ‘தேர்ஸ் ஒன் பார்ன் எவ்ரி மினிட்டில்’ தோன்றினார். பின்னர் ‘லாஸ்ஸி கம் ஹோம் இல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பை பார்த்த எம்ஜிஎம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டெய்லரை தங்கள் படங்களில் நடிக்க ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘நேஷனல் வெல்வெட்’ என்ற திரைப்படத்தில் டெய்லர் ஏற்ற கதாப்பாத்திரம் அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டுசென்றது. அப்போது அவருக்கு வயது வெறும் 12 தான். 1944ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, டெய்லரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஹாலிவுட் இளைஞர்கள் மத்தியில் ‘கனவு கன்னியாக’ மாற்றியது. 1946ம் ஆண்டு வெளியான ‘கரேஜ் ஆப் லாஸ்ஸி’ படம் வெற்றி டெய்லருக்கு மற்றுமொரு பெயரை பெற்று கொடுத்தது.

அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான லைப் வித் பாதர் (1947), சிந்தியா (1947), எ டேட் வித் ஜூடி(1948), ஜூலியா மிஸ்பிஹேவ்ஸ்(1948) ஆகிய அனைத்துமே வெற்றியாக அமைந்தது. இவரை நம்பி பணம் ேபாட்டால் லாபம் அள்ளலாம் என்ற ராசியான நடிகையாக மாறிப்போனார். இவருக்கு “ஒன் ஷாட் லிஸ்” என்னும் பட்டப்பெயரும் உண்டு. அதாவது, எந்த கஷ்டமான காட்சியானாலும் ஒரே டேக்கில் நடித்து முடிக்கும் நடிகையர் திலகமாக திகழ்ந்தார். இவ்வாறு வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருந்த எலிசபெத்துக்கு 1950ல் வெளியான ‘தி பிக் ஹாங்க்ஓவர்’  பாக்ஸ் ஆபீஸில் தோல்விப்படமாக அமைந்தது.

அடுத்ததாக 1954ல் வெளியான ‘ராப்சோடி’ மற்றுமொரு தோல்வி படமாக அமைந்தது. இதன்பிறகு சிறிய வெற்றிபடங்கள் கொடுத்தாலும், 1963ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட படைப்பான ‘கிளியோபாட்ரா’ எலிசபெத்தின் இழந்த செல்வாக்கை மீட்டு தந்தது. அந்த திரைப்படத்தில் கிளியோபாட்ராவாகவே வாழ்ந்து காட்டினார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டபோது அந்த நேரம் வரையில் யாருமே பெறாத மிக அதிகமான ஊதியத்தைப் பெறும் நடிகையானார். எனினும் அடுத்த பத்தாண்டின் இறுதிக்குள் அவருடைய பாக்ஸ் ஆபீஸ் வெகுவாக குறைந்துவிட்டது.

1970களுக்கு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் தலைகாட்ட தொடங்கினார். 2000ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். எலிசபெத் டெய்லர் 7 கணவர்களுடன் எட்டு முறை திருமணம் ஆனவர். 2 மகன்கள், 2  மகள்கள் பிறந்தனர்.  1953ம் ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றார். 1971ம்  ஆண்டில் தன்னுடைய 39வது வயதில் பாட்டியானார். எலிசபெத் டெய்லர் பல  ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார். 2004ல் இவருக்கு இதய  நோய் ஏற்பட்டது, 2009ல் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

2011ல் தனது நான்கு மகன், மகள்களும் சூழ்ந்திருக்க கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலெஸ்  நகர் மருத்துவமனை ஒன்றில் தனது 79வது வயதில் காலமானார். சினிமாவை தவிர பெரும்பாலான நேரத்தை எயிட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதில் செலவிட்டார் எலிசபெத். இதற்காக எலிசபெத் டெய்லர் எயிட்ஸ் பவுண்டேஷன் என்னும் பெயரில் அறக்கட்டளையை  நிறுவினார். 1999ம் ஆண்டுக்குள் அந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்ட உதவினார்.

இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய தோழி ஆவார். இவரது 65வது பிறந்தநாளில் மைக்கேல் ஜாக்சன் இவருக்காகவே எழுதப்பட்ட காவியப் பாடலான “எலிசபெத், ஐ லவ் யூ”வை வழங்கி நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஹாலிவுட் உலகின் கனவுகன்னியாக விளங்கிய எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம்போவது, அவரது மவுசு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

Related Stories: