×

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரம் : மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை : அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டுமென்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் நிறைவேற்ற தவறினால், தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு எதிரான மனு

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை  புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க  தமிழக அரசு பல உத்தரவுகள் பிறப்பித்தும், அனுமதியின்றி குடிநீர் உற்பத்தி ஆலைகள்  இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில், 150 ஆலைகள் இயங்குவதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 80 இடங்களிலும்,  சட்டவிரோதமாக  நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர்நீதிமன்றம்,  சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

நீதிபதிகள் அதிருப்தி

இந்த நிலையில் மேற்கூறிய வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி அலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 ஆலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பொதுபணித்துறை தலைமை பொறியாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தபடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆனால் இந்த உத்தரவையும் முழுமையாக அமல்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  அனுமதியின்றி செயல் படக்கூடிய குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணியை முறையாக செயல்படுத்தாவிட்டால், தமிழக அரசின் தலைமை செயலாளரையும் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : drinking water plants ,District Collectors ,High Court ,Chief Secretary , Drinking water, mills, district collectors, High Court, Warning, Groundwater
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை