×

டெல்லியில் அமைதியை நிலைநாட்ட கோரி ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு : மத்திய அரசின் தோல்வியே வன்முறைக்கு காரணம் என்று சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி : மத்திய அரசின் தோல்வியே வன்முறைக்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதே போல் டெல்லியில் நடந்த கலவரம் நாட்டுக்கே அவமானம் என்றும் நாட்டு மக்களை காக்க மத்திய அரசிடம் ஜனாதிபதி வலியறுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு

இதையடுத்து டெல்லி கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளனர். ராம்நாத் கோவிந்தை சந்தித்து சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். டெல்லியில் கலவரம் நடக்காமல் தடுக்க உள்துறை அமைச்சகம் தவறி விட்டதாக அந்த மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசு தலைவரிடம் மனு அளித்த பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சோனியா காந்தி பேட்டி

அப்போது பேசிய அவர், 4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்றும் எனவே கடமையை செய்ய தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். டெல்லியை வன்முறையை தடுப்பதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார். டெல்லியில் அமைதியை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோனியா கூறினார். குடியரசு தலைவர் தங்களது கோரிக்கைகளை கவனித்து கேட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புவதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

இது குறித்து சோனியா காந்தி மேலும் பேசுகையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினோம்.டெல்லி கலவரத்தின் போது ஏராளமான பொதுச் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.கலவரத்தை பார்வையாளர் போல மத்திய, மாநில அரசுகள் வெடிக்கை பார்த்தன. மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் செயலற்று இருந்ததால் கலவரம் தொடர்ந்து நடந்துள்ளது. டெல்லி வடகிழக்கு வட்டாரத்தில் நடந்த கலவரத்தில் 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே செயலற்று இருந்த அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துளோம் என்றார்


Tags : Congress ,President ,Delhi ,Sonia Gandhi , President, Congress, petition, Sonia Gandhi, interview, petition, central government, Delhi, riots, Manmohan Singh
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்