ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் விளையாட்டு மையதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்றும் புகார் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த விவரங்களை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கினார். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறும். மே.4ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26ல் நிறைவு பெறும்; மே.14ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு;ஏப்.24ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர், என்றார்.

Related Stories: