×

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் கணிசமாக குறைந்த இறப்பு விகிதம்!

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 29 பேர் உயிரிழந்தனர். ஜனவரி மாதத்திற்கு பிறகு இறப்பு விகிதம் இப்போதுதான் இந்த அளவிற்கு குறைந்துள்ளது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கா மக்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நிலையில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைய தொடங்கியுள்ளது. இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

சீனாவில் நேற்று மேலும் 29 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். அதன்பின்னர் இப்போதுதான் அந்த அளவை விட இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 78,500 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 433 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : China , China, coronavirus, kills
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்