1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நான்கு ஆண்டுகளில் 1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மசோதாக்கள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில், 2020-2021 முதல் 2023-2024 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, தொழில்நுட்ப ஜவுளி வகை உற்பத்தியை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.

தொழில்நுட்ப ஜவுளி என்பது அவற்றின் முதன்மையான தொழில்நுட்ப பண்புகள் மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்காக தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலமாக, விண்வெளி வீரர்களுக்கான ஆடை, குண்டு துளைக்காத உடை, தீப்பிடிக்காத ஆடை, கதிர்வீச்சு அபாய தடுப்பு உன உயர் ரகங்கள் தொடங்கி சமானிய மக்களுக்கும் தேவையான தொழில்நுட்ப ஜவுளிகள் வரை  பல்வேறு விதமான ஆடைகள் வரை அனைத்தும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை தாய் மசோதா

வாடகைதாய் ஒழுங்கு முறை மசோதா தொடர்பாக 15 முக்கிய பரிந்துரைகளை 23 பேர் கொண்ட மாநிலங்களவை தேர்வு கமிட்டி அளித்துள்ளது. இதற்கும் அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘மாநிலங்களவை தேர்வு கமிட்டியின் வாடகை தாய் ஒழுங்கு முறை மசோதா தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமலில் உள்ள சட்டங்களோடு, மத்திய அரசின் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,” என்றார்.

Related Stories: