டெல்லி கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: சோனியா வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசும், மாநில ஆம் ஆத்மி அரசுமே முழு காரணம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்,’ என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு பயங்கர கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், டெல்லியில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சோனியா கூறியதாவது:  டெல்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,வின் சதி உள்ளது.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலின் போதும் வன்முறையை தூண்டும் விதமாகவும், அச்சம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பா.ஜ., தலைவர்கள் பேசினர். டெல்லியின் இப்போதைய நிலைக்கு மத்திய அரசும், டெல்லி ஆம் ஆத்மி அரசுமே முழு பொறுப்பு. டெல்லி கலவரத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பாஜ.வின் கபில் மிஸ்ரா பேசியுள்ளார். கட்சியின் செயற்குழுவில் டெல்லியின் தற்போதைய நிலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் பதற்றத்தை தணிக்க கூடுதலாக போலீசார் குவிக்கப்பட வேண்டும். அமைதி குழு அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரசின் அமைதிப் பேரணியும் நடந்தது.

இது, அதை விட கேவலம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘கபில் மிஸ்ரா கூறியது கேவலமானது. அவர் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதை விட கேவலமானது. தலைநகரில் அமைதியை மீட்க அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,’’ என்றார். சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை விரட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு வர வேண்டுமென சமீபத்தில் கபில் மிஸ்ரா அழைப்பு விடுத்ததே பயங்கர கலவரம் வெடித்ததற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறையை அரசியலாக்குகிறார்

சோனியா காந்தி கருத்து குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘‘டெல்லியில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்று அரசுக்கு தெரியும், யாரும் தப்பிக்க முடியாது. அமித்ஷாவை ராஜினாமா செய்யக் கோரும், காங்கிரசின் கோரிக்கை வேடிக்கையானது. வன்முறை தொடர்பாக சோனியா காந்தி கூறிய கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. அனைத்துக் கட்சிகளும் அமைதியை நிலைநாட்ட உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கத்தை குறை கூறுவது அழுக்கு அரசியல். டெல்லி வன்முறையை அரசியலாக்குவது தவறானது. டெல்லியில் நிலைமை முன்னேறி வருகிறது,’’ என்றார்.

Related Stories: