புழக்கத்தில் இருந்து மறைகிறது 2,000 நோட்டு 1,000 நோட்டு மீண்டும் வெளியிடப்படுமா? மாற்றத்துக்கு தயாராகும் வங்கிகள்

புதுடெல்லி: 2,000 நோட்டை படிப்படியாக புழக்கத்தில் இருந்து போக்கும் வகையில், ஏடிஎம்களில் 2,000 நோட்டு மட்டுமே விநியோகிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு மாற்றாக 500 நோட்டு விநியோகிக்கப்பட உள்ளது. இருப்பினும், உயர் மதிப்பிலான ₹2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து விலக்கப்பட்டு வருவதால், மீண்டும் 1,000 நோட்டு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நோக்கில், பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு புதிதாக 2,000, 200 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, 2016-17 நிதியாண்டில் 3,54.29 கோடி 2,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஆனால், 2017-18 நிதியாண்டில் 11.15 கோடி நோட்டு மட்டுமே அச்சிடப்பட்டன. அதன்பிறகு 2018-19 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4.66 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது.

 2,000 நோட்டு வாபஸ் பெறும் திட்டம் இல்லை என அரசு ஏற்கெனவே திட்டவட்டமாக கூறிவிட்டது. இவை தொடர்ந்து செல்லுபடியாகும். இருப்பினும், எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதால், புழக்கத்தில் இருந்து இவற்றை அறவே நீக்கும் திட்டமாகவே இது கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வங்கிகளும் ஏடிஎம்களில் 2,000 நோட்டு வழங்குவதை நிறுத்த தொடங்கி விட்டன. கடந்த வாரம் இந்தியன் வங்கி இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஏடிஎம்களில் 2,000 நோட்டுக்களை பொதுமக்கள் விரும்பவில்லை. அவற்றை சாதாரணமாக கடைகளில் தந்து மாற்ற முடிவதில்லை. அவர்கள் பலரும் வங்கி கிளைகளுக்கு சென்று மாற்றித்தருமாறு கேட்பது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்கவே, படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் குறைத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 1 ம் தேதி முதல் முழுமையாக வங்கி ஏடிஎம்களில் 2,000 நோட்டு வைக்கப்பட மாட்டாது.

வங்கிகளிலும் 2,000 நோட்டு தரப்பட மாட்டாது’ என தெரிவித்திருந்தது. இதுபோல் மற்ற வங்கிகளும் ஏடிஎம்களில் 2,000 நோட்டு விநியோகிப்பதை நிறுத்த தொடங்கியுள்ளன. இதற்கு மாற்றாக அதிக அளவில் 500 நோட்டுக்களை ஏடிஎம்களில் வைக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘2,000 நோட்டு விநியோகத்தை நிறுத்துமாறு நிதியமைச்சகத்தில் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. மக்கள் வசதிக்காகவே கூடுதலாக 500 நோட்டு விநியோகிக்க தொடங்கியுள்ளோம். இருப்பினும், இதன் மூலம் 2,000 நோட்டுக்கள் முற்றிலுமாக புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீங்கி விடும் என உறுதியாக கூறலாம். உயர் மதிப்பிலான நோட்டு புழக்கத்தில் இருந்து நீங்குவதால் இதற்கு மாற்றாக 1,000 நோட்டு வெளியாக வாய்ப்புகள் உள்ளன என்றே கருத வேண்டியுள்ளது. ஆனால், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை’’ என்றனர்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, 2016-17 நிதியாண்டில் 3,54.29 கோடி 2,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஆனால், 2017-18 நிதியாண்டில் 11.15 கோடி நோட்டு மட்டுமே அச்சிடப்பட்டன. அதன்பிறகு 2018-19 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4.66 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது.

Related Stories: