×

உலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம்

ஜெருசலம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக் கூடிய உலகின் முதலாவது  உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், உயிரின அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று  கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ  ஆக்சிஜன் இன்றியமையாதது. சுவாசம் என்பது அனைத்து விலங்குகள், உயிரினங்களில்  நிறைந்திருப்பதாகக்  கருதப்படுகிறது. ஆனால், ஜெல்லி மீன், பவளப் பாறைகளுடன்  ஒன்றி வாழும் ஹென்னகுயா  சால்மினிகோலா என்னும் ஒரு சிறிய ஒட்டுண்ணி, ஆக்சிஜன் இல்லாமல் உயிர்  வாழ்ந்து வருவதை இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக் கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  ஜெல்லி மீன், பவளப்பாறைகளுடன்  ஒன்றி வாழும் இந்த வகை சிறிய ஒட்டுண்ணிகள் இந்தியாவில் காலா, கிழங்கான் என்ற  பெயரில் அறியப்படும் சால்மன் மீன்களுக்குள் காணப்படுகிறது.

இந்த ஒட்டுண்ணியிடம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய எந்த  திறனும் இல்லை என்பதை விஞ்ஞானிகள்  உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து பேராசிரியர் டோரதி ஹுசான்  கூறியதாவது: பெரும்பாலான உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஒரு  உறுப்பு மைட்டோகான்ட்ரியா. இதன் உதவியுடன் தான் உயிரினங்களில் சுவாசம், ஆற்றல்  உற்பத்தி உயிர்வேதியியல் செயல்முறைகள் நடந்து வருகின்றது. ஆனால்,  ஹென்னகுயா சால்மினிகோலா ஒட்டுண்ணியின் உடலில் மைட்டோகான்ட்ரியாவே இல்லை.
இந்த ஒட்டுண்ணி எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறது  என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே போல், இது ஆக்சிஜன்  இல்லாமல்  வேறுபட்ட சுவாசப் பழக்கத்தைக் கொண்டுள்ளதா என்பதும் இன்னும் தெரியவில்லை.

இந்த  ஒட்டுண்ணி காற்று இல்லாத சூழலில் வாழக்கூடிய உயிரினமாக இருக்கக்  கூடும். காற்று இல்லாமல் வாழக்கூடிய உயிரினம்  என்ற புதிய வகையை இந்த ஒட்டுண்ணி உருவாக்கி உள்ளது. இதனால், உயிரினங்களின்  உலகம் பற்றிய அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன்  இல்லாமல் சில உயிரினங்கள் வாழ முடியும் என்பது  தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : world , Oxygen, the living organism, the evolution of life
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்