மதுராந்தகம் அருகே லாரி-பஸ் மோதல் சென்னையை சேர்ந்த 2 பேர் பலி: பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்

சென்னை: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே லாரி மீது பஸ் மோதியதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பெண்கள் உள்பட 16 படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனியார் டிராவல்ஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி சீரான வேகத்தில் சென்றபோது திடீரென பிரேக் போட்டதால் லாரியின் வேகம் குறைந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத தனியார் பஸ் நிலைதடுமாறி லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த முத்துபெருமாள் (50), செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி (44) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள், 14 ஆண்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்த தகவல் படாளம், மதுராந்தகம் போலீசார் மற்றும் மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சம்பவ இடத்திலேயே இறந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஈடுபட்ட லாரி மற்றும் பஸ் ஓட்டுனர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து காரணமாக நேற்று அதிகாலை செங்கல்பட்டு, மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: