×

பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன்  தெரு மற்றும் மாதவரம் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்காவது மண்டல உதவி செயற்பொறியாளர் கோபி மற்றும் உதவி பொறியாளர் மலர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேற்று வந்தனர். பின்னர் ஒவ்வொரு கடையாக பிளாட்பாரத்தில் மேலே கடை போர்டு மற்றும் பிளாட்பாரத்தில் வைத்துள்ள பொருட்களை அகற்றி கொண்டு வந்தனர். அப்போது மாதவரம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட  அதிமுக நிர்வாகிகள் வந்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகளிடம், ‘‘இன்னும் 3 மாதத்தில் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணி வர உள்ளது. அப்போது  அவர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி  கொள்வார்கள். நீங்கள் ஏன்  ஆக்கிரமிப்புகளை அகற்றி  அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறீர்கள்? இதனால்  எங்களது ஓட்டு வங்கி பாதிக்கப்படும்’’ என்றார்.  உடனே செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணி அதிமுகவினரிடம், ‘‘மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை  அகற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை’’ என்று அதிமுக நிர்வாகிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அதிமுகவினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  மாநகராட்சி அதிகாரிகளிடம்  நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது. அவகாசம்  வழங்குங்கள் என தெரிவித்தனர்.

அதற்கு மாநகராட்சி தரப்பில், ‘பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும்  நடைபாதை வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமிப்புகளை  அகற்றவில்லை. அதனால்தான் தற்போது அகற்றுகிறோம்’’ என   தெரிவித்தனர். இருப்பினும் கடை போர்டுகளை எடுக்கக்கூடாது சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை  மட்டும்  அகற்றுங்கள்  என அதிமுக சார்பில் தெரிவித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவிற்கு சாலையில் இருந்த ஒன்றிரண்டு ஆக்கிரமிப்புகளை மட்டும்   அகற்றிவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் ஏற்பட்டது.


Tags : protest ,removal ,AIADMK ,Perambur ,Madhavaram ,Governments , Perambur, Madhavaram, Highways, Ammukha
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...