தூர்வாரி சீரமைக்கப்பட்ட கீழ்கட்டளை ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: பொதுநல சங்கத்தினர் கோரிக்கை

ஆலந்தூர்: கீழ்கட்டளை ஏரியில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுநலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி சாலையில் கீழ்கட்டளை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள  இந்த  ஏரி 56 ஏக்கர் பரப்பளவு  கொண்டது.  இந்த ஏரியை சுற்றிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்பட்டு ஏரி மாசுப்பட்டு காணப்பட்டது. இந்த ஏரியை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது நலச்சங்கத்தினரும்  போராடி வந்தனர்.  இந்நிலையில் கீழ்கட்டளை ஏரியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பல்லாவரம் நகராட்சி திட்டமிடப்பட்டது. இதற்காக,  பொதுப்பணித்துறையிடம் தடையில்லா சான்று பெற்று கடந்த 2018ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கவும்  ஏரியின் தன்மை மாறாமலும் மழைநீர் ஏரிக்குள் செல்வதற்கு ஏதுவாகவும் மழைநீர் கால்வாய் அமைக்கவும், கழிவுநீரை எக்காரணத்தை கொண்டும் ஏரிக்குள் விடக்கூடாது என்ற  நிபந்தனையுடன்  பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியது.  

இதன்படி,  இந்த ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியில் சேரும் உபரிநீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும் கலக்கவும்  வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஏரி  மீண்டும் மாசுப்பட்டு காணப்படுகிறது. காரணம் இந்த ஏரியில் நிபந்தனைக்கு மாறாக  சாக்கடை, கழிவு  நீர்   ஏரியில் கலக்கப்படுகிறது. பல்லாவரம் நகராட்சியில் இருந்து வெளிவரும்     சாக்கடை  கழிவுநீர் கால்வாய் மூலம் துரைப்பாக்கம் பகுதிக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது கீழ்கட்டளை பகுதி அருகே மேம்பால பணி நடந்து வருவதால் அங்கிருந்த  கழிவுநீர் கால்வாய்  மூடப்பட்டுள்ளது.  இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றது.   இதனை தவிர்க்க பல்லாவரத்தில் இருந்து கால்வாய் மூலம் வரும் கழிவுநீரை  கீழ்கட்டளை ஏரியில் கலக்க வழிவகை செய்யப்பட்டது. ஆறுபோல பாய்ந்து வரும் இந்த   சாக்கடை கழிவுநீரால் ஏரி மாசுப்பட்டு காணப்படுகிறது. இதனால், சுற்று புறங்களில் உள்ள நீராதாரம்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆகவே, பொதுப்பணி துறையினர் கழிவுநீர் கால்வாய் மூலம்  ஏரியில் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என நீர்வள ஆர்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து பொது நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இந்த ஏரி தூர்வாரப்பட்டபோது நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.  ஆனால் தற்போது எங்கிருந்தோ வரும் சாக்கடை கழிவுகள் ஏரியில் விடப்படுவதை எங்களால்  ஏற்றுக்கொள்ள முடியாது. ஏரி தற்போது பச்சை நிறத்திற்கு மாறி கலங்கலாக காணப்படுகிறது.  இந்த ஏரி நீரை காக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியினை பார்வையிட்டு  கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: