கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது

* தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்படும்

* ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக உயர் கல்வித்துறை  சென்னை உயர்  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு சென்னை லயோலா கல்லூரி கூட்ட அரங்கம் வாடகைக்கு விடப்பட்டதை எதிர்த்து பத்திரிகையாளர் சுஜிதா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீதிமன்றமே தாமாக  முன்வந்து பொது நல வழக்காக விசாரிக்க பரிந்துரைத்தார்.  அதன்படி, மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றில் சலுகை பெறும் பொறியியல், மருத்துவம், பல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகங்களை கல்வி சாராத பிற வணிக நோக்கிற்காக  பயன்படுத்துவது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் கல்லூரி வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென லயோலா கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்கல்வி துறை  தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் மனோகரன் ஆஜராகி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அந்த கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.   கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை அரசு  மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், லயோலா கல்லூரி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Related Stories: