பொதுத் தேர்வு மார்ச் 2ல் தொடக்கம்: 25.87 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை:  தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி  தொடங்க உள்ள பள்ளிப் பொதுத்தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ- மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளன. இந்த தேர்வில் எவ்வளவு பேர்  பங்கேற்க உள்ளனர் என்ற புள்ளி விவரங்களை தேர்வுத்துறை தயார் செய்துள்ளது. இதன் படி மேற்கண்ட 3 வகுப்புகளிலும் இருந்து 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ- மாணவியர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ்2

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகிறது.   தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ- மாணவியர் எழுத உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 74  ஆயிரத்து 747 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேர் மாணவியர். புதுச்சேரியில் இருந்து பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 14,958 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களில் 7,025 மாணவர்களும், 7,933 மாணவியரும்  பங்கேற்கின்றனர். தமிழகத்தில் தேர்வு எழுத உள்ளவர்கள் மொத்தம் 8 லட்சத்து 1,401 பேர். அவர்களில் 3 லட்சத்து 67  ஆயிரத்து 722 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 679 பேர் மாணவியர்.

பிளஸ் 1

பிளஸ்1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிகின்றன. தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகும். இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த மொத்த மாணவர்கள் 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுதுகின்றனர்.  இவர்களில் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 14 ஆயிரத்து 779 பேர் எழுதுகின்றனர். அவர்களில் மாணவர்கள் 6,941, மாணவியர் 7,838 பேர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 340 பேர் எழுதுகின்றனர். அவர்களில் மாணவர்கள்  3 லட்சத்து 78 ஆயிரத்து 926 பேரும், மாணவியர் 4 லட்சத்து 32 ஆயிரத்து 414 பேரும் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.  தமிழகம் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அவர்களில்  மாணவர்கள் 4 லட்சத்து 74 ஆயிரத்து 844 பேரும், மாணவியர் 4 லட்சத்து 70 ஆயிரத்து 155 பேரும் எழுதுகின்றனர். புதுச்சேரியில் இருந்து மொத்தம் 16521 பேர் எழுதுகின்றனர். அவர்களில் மாணவர்கள் 8293, மாணவியர் 8227 பேரும்  எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 28 ஆயிரத்து 485 பேர் எழுதுகின்றனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 66 ஆயிரத்து 551 பேரும், மாணவியர் 4லட்சத்து 61 ஆயிரத்து 928 பேரும் எழுதுகின்றனர்.

மேற்கண்ட தேர்வுகளில் சிறைவாசிகள் 144 பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். தேர்வு நேரத்தில் ஏற்படும் குறைகளை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறை காலை 8  மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. புகார் தெரிவிக்க விரும்புவோர் 9385494105, 9385494115, 9385494120 ஆகிய எண்களை மாணவர்கள் பெற்றோர் பயன்படுத்தலாம்.

Related Stories: