நிலுவை ஆவணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 15 நாட்களுக்கு புதிய மனை பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம்: சார்பதிவாளர்களுக்கு ஐஜி உத்தரவு

சென்னை:தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் போது, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு  அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், மதிப்புகளில் முரண்பாடோ அல்லது மதிப்பு நிர்ணயிக்காமல் உள்ள புதிய மனை பிரிவுகளாக இருக்கும் பட்சத்தில் சார்பதிவாளர்கள் மூலம் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு  பதிவுக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சார்பதிவாளர்கள் நேரில் சென்று புதிய மனைப்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம் செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், புதிய மனைப்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம்  செய்யாமல் சார்பதிவாளர்கள் காலதாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பத்திரம் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதே போன்று ₹50 லட்சம் மதிப்புக்கு கீழ் உள்ள கட்டிடங்களை சார்பதிவாளர்களும், ₹50 லட்சத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களின் மதிப்பை பொதுப்பணித்துறை பொறியாளர்களும் நேரில் செய்து கள ஆய்வு செய்து மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். ஆனால், கள ஆய்வு செய்யாமல் சார்பதிவாளர்கள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பத்திரம் பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் பல இடங்களில் கள ஆய்வு செய்யப்படவில்லை. இதனால், கட்டிடங்களின் மதிப்பு  ஒரிஜினல் தானா என்பது தெரியவில்லை. சில இடங்களில் ஆய்வு செய்யாமலேயே மதிப்பு நிர்ணயம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான பபதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி கவனத்துக்கு புகார் கொண்டு  செல்லப்பட்டது.இதை தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி சார்பில் ஆவணங்கள் நிலுவையில் இருப்பதாக சுட்டி காட்டப்பட்டுள்ளதால் புதிய மனை பிரிவுகளுக்கு தாமதம் நேராமல் 15 நாட்களுக்குள் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். சார்பதிவாளரால்  மேற்கொள்ளப்படும் கட்டிட கள ஆய்வு பணியை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: