கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக எங்களுக்கு சீட் தரவேண்டும்: பிரேமலதா பரபரப்பு பேட்டி

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பகல் ஒரு மணி விமானத்தில் கோவையில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:சிஏஏ சட்டத்தை பொறுத்தமட்டில் அந்த சட்டம் பற்றி மக்களுக்கு போதிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனவே, அந்த சட்டத்தின் நிலை என்ன, அதனால் என்னென்ன நடக்கும் என்பது பற்றிய முழு விவரங்களை மத்திய, மாநில  அரசுகள் முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இந்த சட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமரும் முதல்வரும் தெரிவித்துள்ள நிலையில் அதை நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில் இஸ்லாமியர்களுக்கு  இந்த சட்டத்தினால் ஏதாவது சிறுபிரச்சனை ஏற்பட்டால் கூட தேமுதிக முதல் ஆளாக களத்தில் இறங்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

அதிமுகவுடன் முதலில் கூட்டணி அமைக்கும்போதே நாங்கள் தெளிவாக பேசியிருக்கிறோம். தேமுதிகவை பொறுத்தமட்டில் நாங்கள் கூட்டணி தர்மத்தை முழுமையாக கடைபிடித்து வருகிறோம். அதேபோல் முதலமைச்சரும் கூட்டணி  தர்மத்துடன் நிச்சயமாக ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றை எங்களுக்கு தருவார் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். நாங்கள் கூட்டணி முடிவாகும்போதே கேட்டதுதான். அப்போது அவர்கள் பின்னால் பார்ப்போம் என்று தெரிவித்திருந்தனர்.  இப்போது எதுவும் தெரியவில்லை. அதனால்தான் கூறுகிறேன், நாங்கள் கூட்டணி தர்மத்தை இதுவரை மதிக்கிறோம். அவர்களும் கூட்டணி தர்மத்தை மதித்து அந்த தர்மத்தின் பெயரில் எங்களுக்கு சீட்தரவேண்டும். அவர்கள் என்ன  நினைக்கிறர்கள் என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாசனுக்கும் எதிர்பார்ப்பு

விழுப்புரத்தில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தமாகாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து தான். 3 மாநிலங்களவை உறுப்பினர்  பதவிக்கு அக்கட்சியில் போதுமான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றார்.

Related Stories: