×

குடியுரிமைக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: குடியுரிமைக்கு இந்திய நாட்டில் பாதுகாப்பு இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குடியுரிமைக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால்தான் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு இங்கு நடத்தப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் கடந்த 2, 3  நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால் அங்கு யார் கையில் அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுகிறது.  உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார், தேவையான காவல்துறையினர் இல்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார். இது யாருடைய தவறு. தலைநகருக்கே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களுக்கு என்ன நிலை  வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். செய்திகளை பதிவு செய்ய சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதைப்பார்க்கும்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை. இதுபற்றி பேசினால் எதிர்கட்சிகள்  போராட்டங்களை தூண்டிவிடுகிறது என்ற பதிலை தவிர மத்திய அரசிடம் வேறு எந்த பதிலும் இல்லை. இந்த மாநாட்டு மேடையில் அனைத்து கட்சியினரும் சேர்ந்தது பாஜ ஆட்சியை எதிர்க்க அல்ல, அரசியல் செய்வதற்காகவும் அல்ல.  இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்னைதான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 5 டிரிலியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று சொன்னார்கள்,  அதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு ஆக்குவோம் என்று சொன்னார்கள். ₹2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னார்கள். கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் ேபாடுவோம் என்று  சொன்னார்கள். ஆனால் ஒரு 15 ஆயிரம் அல்லது ஒரு 15 ரூபாய் அல்லது 15 காசு கூட போடவில்லை.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. குடியுரிமை வழங்கத்தான் ஒரு அரசு சட்டம்  ஏற்றும். ஆனால் இந்த பாஜ அரசு குடியுரிமை பறிப்பதற்காக சட்டத்தை ஏற்றி இருக்கிறது. இதைவிட வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது. மக்களிடையே பெரும் அச்சம் உள்ளது. இதைபோக்கும் கடமை மத்திய அரசுக்கு இல்லையா?. இந்த  சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.

அசாமில் லட்சக்கணக்கான இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போது இந்து பாதுகாவலர் என்று கூறிக்கொண்டவர்கள் எங்கே போனார்கள். நாங்கள் இந்துவை எதிர்க்கவில்லை. நாங்கள் இந்துமத நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை.  இந்துத்துவத்தை மட்டும் எதிர்க்கிறோம். சட்டப்பேரவையில் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. முதலமைச்சர் முகத்தை சாதாரணமாகவே பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு எங்களை பார்த்து கடுகடு  முகத்துடன் பதில் அளித்தார். என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பால் பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பில்லை என்று கூறிய முதல்வர் அதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஏன் கடிதம் எழுதுகிறார். இதன்மூலம் அவர் பாதிப்பு உள்ளது என்பதை மறைமுகமாக  ஒத்துக்கொள்கிறார்.
 மதமும், சாதியும் இருபக்கமும் கூர்மைகொண்ட கத்தி போன்றது. அந்த கத்தியை பயன்படுத்துபவர்களையே அது பாதிக்கும். இது இந்தியாவை காக்கக்கூடிய போர். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை  திரும்பப்பெறுங்கள். என்ஆர்சி, என்பிஆர்-ஐ கைவிடுங்கள். மக்கள் எதிர்பார்ப்பது அமைதியான சூழலை மட்டுமே. அதை மோடி அரசு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். இமயம் முதல் குமரி வரை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்
நடந்து வருகிறது.Tags : country ,MK Stalin ,DMK ,MK Stalin Citizenship ,Country for No Protection , protection , citizenship, country,DMK leader, MK Stalin
× RELATED மருத்துவ பரிசோதனை, முகக்கவசம் இல்லை...