கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை:  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர  மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடந்த சில ஆண்டுகளாக பொன். மாணிக்கவேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஓய்வு பெற்ற கடந்த 2019 நவம்பர்  30ம் தேதி விசாரணை ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்று கூறி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவகுமார்  சார்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 19 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலும் 15 பாதுகாப்பு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 31 ஆயிரம் கோயில்களில் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரம் சிலைகள் படம்பிடிக்கப்பட்டு, டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள  சர்வரில் சேமிக்கப்பட்டுள்ளது.இன்னும் 3087 கோயில்களில் தலா ₹10 லட்சம் செலவில் சிலைகள் பாதுகாப்பு அறைகளை கட்டுவதற்கு தமிழக அரசு ₹308 கோடியே 70 லட்சம் ஒதுக்கியுள்ளது. சிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா  கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள சிலைகள் அரிதானவை. செய்தித்தாள்களில் கூட சிலைகள் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க  வேண்டும். விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: