×

பேரையூர் மலையடிவாரப்பகுதியில் கண்டுபிடிப்பு பெருங்கற்கால மக்கள் வாழ்விடம், 3,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி

மதுரை: பேரையூர் அருகே  மலையடிவாரத்தில் பெருங்கற்கால மக்கள் வாழ்விடமும், இங்கு 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியும் கண்டறியப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா பகுதிகளில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளரும், கல்லூரி பேராசிரியருமான முனீஸ்வரன் தனது தொல்லியல் குழுவினருடன் சென்று கள ஆய்வு செய்தார். இதில் பெருங்கற்கால  மக்கள் வாழ்விடமும், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது:பேரையூர் மேற்குப்பகுதியில் கொப்பையா சுவாமி கோயிலின் மலை அடிவாரத்தில் கல்மேடு பகுதிகள், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டது. அங்கு பெருங்கற்காலம் தொடங்கி சங்க காலம்  வரை 3 கட்டமாக வாழ்விடம் காணப்படுகிறது. புதைந்த நிலையில் சுமார் 30க்கும் அதிக முதுமக்கள் தாழிகள் மேற்பரப்பில் உடைந்த நிலையிலும், புதைந்த நிலையிலும் உள்ளன.

முதுமக்கள் தாழியின் உட்பகுதியின் கருப்பு சிவப்பு வண்ணத்திலான, மெல்லிய தடித்த பானை ஓடுகளுடன், உடைந்த கல் வளையமும் உள்ளன. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 84 செமீ விட்டம் 2 இஞ்ச் தடிமனில் உடையாத நிலையில் புதைந்து  இருக்கிறது. மற்றொன்று இதைவிட சிறியதாக 60 செமீ விட்டத்திலும் ஒரு இஞ்ச் தடிமனில் உடைந்த நிலையிலும் இருக்கிறது. தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதி தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் உள்ளன. குறிப்பாக மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் முதுமக்கள் தாழியின் நடுப்பகுதி அகன்ற கருவுற்ற தாயின் வயிறு போன்று அமைந்துள்ளது.பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி  வாழ்ந்தற்கான சான்றாக இரும்புத்தாது கொண்டிருந்த கற்கள் எரிந்த குவியல் நிலையில் எச்சங்களாக காணப்படுகிறது. இரும்பு தயாரிப்பதற்காக சுடுமண்ணால் செய்யப்பட்ட  குழாய் சிதைந்த நிலையில் இருக்கிறது. பேரையூர் மலையடிவாரப் பகுதியில் அகழாய்வு செய்தால், தமிழர் வாழ்வியலின் அரிய பல தகவல்களை அது கொண்டு வந்து சேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : lad ,Peraiyur Mountain Range The Discovery ,Peraiyur Mountain Range Habitat , Discovery , Peraiyur Mountain, Range, old lad
× RELATED தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில்...