×

6 மாதமாகியும் இன்னும் தமிழக பாஜ தலைவர் நியமிக்கப்படாதது ஏன்?: பரபரப்பு புதிய தகவல்

சென்னை: தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களை கடந்த பிறகும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இப்பதவிக்கு தமிழக பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, தமிழிசை ஆதரவாளர்கள், வானதி சீனிவாசன், பொது செயலாளர் நரேந்திரன், பேராசிரியர் சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என்று  பல்வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த கோஷ்டி பூசல் அண்மையில் பாஜவின் கிளை, ஒன்றியம், மாவட்ட அளவில் நடந்த தேர்தலில் வெளிப்படையாக வெளிப்பட்டது. அதாவது, ஒவ்ெவாரு கோஷ்டியினரும்  தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நிர்வாகிகளாக போட்டு  கொண்டனர். கட்சியை வளர்ப்பதை விட்டு இப்படி தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டால் தமிழகத்தில் பாஜவை வளர்க்க முடியாது என்று டெல்லி மேலிடம் தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் யாரை தலைவராக நியமித்தாலும் கோஷ்டி பூசல் இன்னும் அதிகமாக தான் ஏற்படும் டெல்லி மேலிடம் கருதுகிறது. இது ஒருபுறம் இருக்க தலைவர் பதவிக்கு பாஜ இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகனை நாடியுள்ளார்.இதே போல அதிமுகவில் இருந்து பாஜவில் இணைந்த தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மாதத்துக்கு 15 நாட்களாக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார். அவர் தன்னை தலைவராக நியமித்தால் தமிழகமே திரும்பி பார்க்கும்  வகையில் சென்னை, மதுரை, ராமநாதபுரம், கோவையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த தயார் என கூறி வருவதாக கூறப்படுகிறது. பிரச்னையில் சிக்காத சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற சினியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஒரு  பக்கம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், டெல்லி மேலிடம் தலைவரை நியமிப்பதில் குழப்பமாக இருந்து வருகிறது. இதனால் இப்போதைக்கு தலைவர் நியமிக்கும் முடிவை கிடப்பில் போடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துள்ளதாக பாஜ வட்டாரத்தில்  கூறப்படுகிறது. அடுத்த மாதம் பாஜவின் தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு தமிழக பாஜ தலைவர் நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருவதால் தலைவர் பதவியை பிடித்தால் தான் எம்எல்ஏ சீட்டை வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என்பதால் தான் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : BJP , 6 months ,BJP leader, appointed?
× RELATED கொரோனா வதந்தி பரப்பிய பாஜ பிரமுகர் கைது