மூலதன நிதியில் இருந்து மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு செலவு அரசு உத்தரவால் நெருக்கடியில் கோயில்கள்

* கால பூஜைகள் நிறுத்தப்படும் அபாயம்

* செயல் அலுவலர்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு பகீர் புகார்

சென்னை: கோயில்களின் மூலதன நிதியில் இருந்து மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு செலவு செய்ய உயர் அதிகாரிகள் நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து  வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 10 ஆண்டுகளில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கோயிலில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள புதிதாக மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்க அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து  கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு கோயில்களுக்கும் தனித்தனியாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் அந்தந்த கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, கோயில்களில்  பக்தர்கள் வருகையை கவனத்தில் ெகாண்டு வாகன நிறுத்தம், கழிவறை, குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில்  அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் தனித்தனியாக ஆர்க்கிடெக் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூலம், மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆர்க்கிடெக்ட் நியமிக்கப்பட்டதற்கு ₹15 லட்சம் வரை கோயில் நிர்வாகம் செலவு செய்துள்ளது. மாஸ்டர் பிளான் தயார் செய்த பிறகு அப்பணிகளை கோயில்களின் மூலதன நிதியில்  இருந்து செலவு செய்ய உயர் அதிகாரிகள் கடும் நெருக்கடியை தருகின்றனர். இந்த பணிகளை பொதுவாக தமிழக அரசின் நிதியை பெற்று அதன் மூலம் தான் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், தற்போது, கோயில் மூலதன நிதியை  செலவு செய்யும் பட்சத்தில் கஜானா காலியாக வாய்ப்புள்ளது. எனவே, கோயில்களில் பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, அன்னதான திட்டம் செயல்படுத்துவது, கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது  உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய முடியாத அபாய நிலை ஏற்படும்.

எனவே, இந்த திட்டப்பணிகளை தமிழக அரசு நிதியை பெற்று செயல்படுத்த வேண்டும் என்று கோயில் அலுவலர்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் ெதரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

Related Stories: