×

மாநிலங்களவை தேர்தல் கூட்டணி கட்சிகளுக்கு சீட் கிடையாது: முதல்வர் எடப்பாடி பதில்

திருச்சி: தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உண்டா? என்று கேட்டதற்கு, ‘‘கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அ.தி.மு.க.வில் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.திருச்சி  மாவட்டம் முக்கொம்பில் ₹387 கோடியில் புதிதாக அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முக்கொம்பில் அணை கட்டும் பணி 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2021 ஜனவரிக்குள் பணிகள் முடிந்துவிடும். என்.ஆர்.சி. கணக்கெடுப்பு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது கொண்டு வரப்பட்டது. இப்போது புதிதாக 3 விஷயங்களை மத்திய அரசு சேர்த்திருக்கிறது. ஒன்று மொழி, அடுத்தது பெற்றோர் இருப்பிடம், மூன்றாவது ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அட்டை. இந்த 3 ஆவணங்களை இருந்தால் கொடுக்கலாம். இல்லாவிட்டால் பரவாயில்லை என்றும் மத்திய அரசு கூறி விட்டது.

காவிரியில் மணல் அள்ளுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணிகளுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட இடங்களில் மணல் அள்ளப்படுகிறது. எம்.சாண்ட் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். சேலத்தில் நான் பேசிய போது, திருச்சி, அரியலூரும் வேளாண் மண்டலமாக்கப்படும் என்று கூறி இருந்தேன். அப்போது அதிகாரிகள் தந்த தகவல்படி சொன்னேன். பின்னர் மீத்தேன் எங்கு அதிகம் கிடைக்கிறது என்று ஆலோசித்த பின்னர் இந்த திட்டத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்த்துள்ளோம். திருச்சி, அரியலூர், கரூரில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் இந்த பகுதிகளை வேளாண் மண்டலமாக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தங்களுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாரே? என்று வினா எழுப்பியபோது, ‘‘கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அ.தி.மு.க.விலும் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்’’ என்று பதில் சொன்னார். அதிமுக கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு சில கட்சிகள், ராஜ்ய சபா எம்.பி. பதவியை எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வரின் பதில் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்காது என்பது தெளிவாகி உள்ளது.

‘சந்தர்ப்பம் கிடைத்ததால் முதல்வரானேன்’
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் மகன் திருமண விழா தஞ்சையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ேபசுகையில், வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்றார்.

என்.ஆர்.சி. எதிர்ப்பு தீர்மானம் தமிழக அரசு பரிசீலனை
பேட்டியின்போது, ‘பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் மாநில அரசு, என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதே என நிருபர்கள் கேட்டதற்கு, அது அரசு பரிசீலனையில் உள்ளது’ என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

Tags : election coalition parties ,Rajya Sabha ,elections ,Chief Minister ,Edappadi ,parties ,CM ,Alliance , Rajya Sabha, elections, seats, CM responds
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...