×

விருத்தாசலத்தில் 3800 லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர், இடைத்தரகர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர், இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55). இவர் கடந்த சில வருடங்களாக விருத்தாசலம் அண்ணாநகரில் குடும்பத்தோடு தங்கி ஊர் ஊராக சென்று பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் தமிழரசிக்கு கடந்த 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பதிவு செய்ய விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

பின்னர், சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபாவிடம் விண்ணப்பத்தை தந்துள்ளார். ஆனால், பதிவு செய்வதற்கு ₹3800ஐ லஞ்சமாக தரவேண்டும் என கேட்டு முன்பணமாக ₹800-ஐ பெற்று கொண்டார். மீதி பணத்தை 3 நாட்களில் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சொன்னபடி பணம் தராததால் வெள்ளிக்கிழமையன்று கோவிந்தராஜன் வீட்டுக்கு விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா சென்று வற்புறுத்தியுள்ளார்.  அவருடன் இடைத்தரகர் கார்த்திகேயன் இருந்துள்ளார். அப்போது, கோவிந்தராஜன் பணம் தராததால் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, கோவிந்தராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள், ரசாயனம் தடவிய ₹3 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். கோவிந்தராஜ் அந்த பணத்துடன் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று ஜெயபிரபா, கார்த்திக் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயபிரபா நாளை பணியிலிருந்து ஓய்வுபெற  இருப்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Social welfare extension officer , Social ,extension ,arrested ,bribery
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்