×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை 3 ஆண்டுகளாகியும் அறிக்கை தராதது ஏன்?: சோளிங்கரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன் இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த நாட்டில் பிறந்துள்ள நாம் குடியுரிமை பெற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்குஎதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஆதரவு தெரிவித்து ஓட்டுபோட்டது பாஜவின் அடிமையான ஆளும் அதிமுகவும், பாமகவும் தான். மாநிலங்களவையில் 10 அதிமுக, ஒரு பாமக என்று மொத்தம் 11 பேர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இவர்கள் எதிர்த்து ஓட்டளித்திருந்தால் இந்த குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வந்திருக்காது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தபோது டெல்லி தலைநகரில் கலவரம் நடந்திருப்பதை தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் பார்த்தோம். இந்த கலவரத்திற்கு காரணமே இவர்கள் ஓட்டளித்ததுதான். நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று மக்கள் ஒற்றுமையாக இருந்தாலும், அதனை பிளவுபடுத்தும் விதமாக இந்த குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த குடியுரிமை சட்டத்தில் நீங்கள் பிறந்த ஊர், உங்கள் தாய், தந்தை பிறந்த ஊர், தாத்தா, பாட்டி, எந்த ஊரில் எந்த ஆண்டு பிறந்தார்கள், அவர்கள் பெயர் என்ன என்கிற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை டவுட் லிஸ்டில் வைத்து விடுவார்களாம். இதில், வேடிக்கை என்னவென்றால் தமிழக சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் எங்கு பிறந்தேன் என்று எனக்கே தெரியாது, என்று கூறியுள்ளார். முதல்வருக்கே இந்த நிலை தான். தமிழகத்தில் ஊழல் கொடிகட்டி பறக்கக் கூடிய ஆட்சி நடக்கிறது. லஞ்ச ஒழிப்புதுறையில் இயக்குநர், ஆணையர் என்று உள்ளனர். ஆனால் ஊழல் குறித்து இவர்களால் விசாரிக்க முடியாது. இந்த ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் நடக்கிறது. இதில் நம்பர் ஒன் கலெக்‌ஷனில் இருப்பது அமைச்சர் வேலுமணி தான். இவர் சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கலெக்‌ஷன் நடத்தி வருகிறார். அதனை விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், விசாரணை கோப்புகளை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதேபோல், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிவிட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை விசாரிக்க கையெழுத்து போடுவது முதல்வர் தான். மொத்தம் 16 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் சேர்த்தே கையெழுத்து போட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஆட்சி நடக்கிறது.மறைந்த முதல்வர் ஜெயலிலிதாவின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டாம் என்று நான், சொல்லவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்ன ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து 40 நிமிடங்கள் ஆவியுடன் பேசினார். பின்னர் நீதி விசாரணை வேண்டும் என்றார். அவரை சமாதானம் செய்வற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும், என்றார் இபிஎஸ். பின்னர், ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதா 2016ல் இறந்தார். 2017ல் விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. 3 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சொன்ன நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் அறிக்கை அளிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதில் உள்ள மர்மங்கள் வெளியே வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வெளியே இருக்க முடியாது. ஓராண்டுக்குள் தேர்தல் வரும். திமுக ஆட்சி அமைக்கும். இறந்தது அதிமுக தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் இறந்தது தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது. தற்போது தமிழகத்தில் மக்களை பற்றியும், நாட்டைப் பற்றியும் கவலைப்படாத ஆட்சிநடக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தற்போது தமிழகத்தில்
மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் கவலைப்படாத ஆட்சி நடக்கிறது.


Tags : death ,Investigation ,Jayalalithaa ,Speech ,MK Stalin , Jayalalithaa, death, MK Stalin,Sholingar
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...