ஆம்புலன்ஸ், டூவீலருக்கு தனிப்பாதை அமைக்கும் வரை மதுரை வண்டியூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை:  மதுரை, கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல், வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் விஜயராஜா ஆகியோர் தனித்தனியே, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  சென்னையில் இருந்து விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, வண்டியூர் (மஸ்தான்பட்டி), சிந்தாமணி, பரம்புப்பட்டி, கப்பலூர் என 5 டோல்கேட்களில் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  டோல்கேட்களில் வாகனங்கள் அதிக தூரத்திற்கு காத்திருப்பதால், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இங்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. வக்கீல்களின் வாதங்களுக்குப்பிறகு நீதிபதிகள், ‘‘வண்டியூர் டோல்கேட்டில் தேவையான வசதிகளும், ஆம்புலன்ஸ் மற்றும் டூவீலருக்கு தனி பாதை அமைக்கும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த இழப்பை ஈடுகட்ட மற்ற இரு டோல்கேட்டுகளில் மறைமுகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: