டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டணம் செலுத்துவதில் தகராறு லாரி டிரைவர், கிளீனரை கம்பியால் தாக்கிய ஊழியர்கள்: 6 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே அத்திப்பள்ளி டோல்கேட்டில், பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், லாரி டிரைவர், கிளீனரை டோல்கேட் ஊழியர்கள் பிடித்து இரும்பு கம்பியால் அடித்து, பூட்ஸ் காலால் உதைத்தனர். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  கர்நாடகா மாநிலம் ஆனேக்கல்லில் இருந்து கிருஷ்ணகிரிக்கு, அட்டைபெட்டி லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று காலை வந்து கொண்டிருந்தது. லாரியை ஆனேக்கல்லை சேர்ந்த ஜெகதீஸ்(35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனரும் இருந்தார். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட்டிற்கு காலையில், லாரி வந்த போது, அவரது பாஸ்டேக் வில்லையில் போதிய பணம் இல்லை என கூறிய டோல்கேட் ஊழியர்கள், கட்டணம் செலுத்தும்படி டிரைவர் ஜெகதீசிடம் கேட்டுள்ளனர். அப்போது பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தப்பட்டதாக, ஜெகதீசின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது.

அதனை டோல்கேட் ஊழியர்களிடம் அவர் காண்பித்தார். ஆனால், அந்த எஸ்எம்எஸ்சை பொருட்படுத்தாத டோல்கேட் ஊழியர்கள், தொடர்ந்து அவரை கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டோல்கேட் ஊழியர்கள் சிலர், ஜெகதீசை சரமாரியாக தாக்கினர். தடுத்த கிளீனருக்கும் அடி உதை விழுந்தது. பின்னர் டோல்கேட்டில் இருந்த ஊழியர்கள் மொத்தமாக திரண்டு வந்து இருவரையும் அங்கிருக்கும் அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர். இரும்பு கம்பியாலும் தாக்கினர். சிலர் ஷூ காலால் எட்டி உதைத்தனர்.இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், டிரைவர் ஜெகதீஷ் அத்திப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லாரி டிரைவர், கிளீனர் மீது தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்கள் ராஜேஷ், நாகேஷ், தேவேந்திரா, மனோகர், தாமோதர், வினோத் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே டிரைவர், கிளீனரை டோல்கேட் ஊழியர்கள் தாக்குவது, இரும்புக்கம்பியால் அடிப்பது, ஷூ காலால் எட்டி உதைப்பது போன்ற வீடியோ நேற்று வைரலாக பரவியது.

Related Stories: