ராஜபாளையம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும்: டிஆர்ஓவிடம் அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தல்

தென்காசி: ராஜபாளையம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும் என தென்காசி டிஆர்ஓவிடம் அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தினர். தென்காசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், தென்காசி எம்.பி தனுஷ்குமார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர், திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் முத்தையா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், பாஜ மாவட்டச் செயலாளர் பாண்டித்துரை, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இசை மதிவாணன், வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், நன்செய் மீட்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத் தலைவர் மாடசாமி, திமுக மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, ன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், கடையம் ஜெயக்குமார் தலைமையில் நேற்று 400க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தனுஷ்குமார் எம்.பி., முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் டிஆர்ஓ கல்பனாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதில் ராஜபாளையம் - செங்கோட்டை வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர். பின்னர் இதுகுறித்து திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் கூறுகையில், ‘‘ராஜபாளையம் - செங்கோட்டை வரையிலான நான்கு வழி சாலை தேவையான ஒன்றாக இருக்கும் அதே வேளையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழிப்பாதையில் நான்கு வழி சாலைத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஏற்கனவே திட்டமிட்டு உள்ள வழித்தடத்தில் நிறைவேற்றினால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படும். அதிகமான வளைவுகளை உடையதாகவும் சாலை இருக்கும். மேலும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி ஆகியவற்றுக்கு நான்கு வழிச்சாலை இல்லாத நிலை ஏற்படும். எனவே மாற்று வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு மாற்று வழித்தடத்தில் அமைத்தால் கிட்டத்தட்ட 12 கி.மீ. தொலைவு குறைவாக உள்ளது. பெருமளவு வளைவுகள் இருக்காது. மாவட்டத்தின் தலைநகரான தென்காசி மற்றும் முக்கிய நகரங்களான கடையநல்லூர் புளியங்குடி ஆகியவையும் பயன்படும். ஆண்டு ஒன்றுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்திற்கு நான்கு வழி சாலை மூலம் விரைவாக செல்ல முடியும். எனவே விவசாய சங்கங்கள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், மற்றும் அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்பினர் கொடுத்துள்ள மாற்று வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: