இயற்கை உரங்களை பயன்படுத்தி பாறை மீது நெல் விவசாயம்: விவசாயி சாதனை

அருமனை: குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கிய விவசாய விளை பயிராக நெல் விளங்கி வந்தது. காலம் செல்ல செல்ல நெல் விவசாயம் செய்யும் பகுதிகள் சுருங்கியது. நெல் விளைந்த இடங்களில் ரப்பர், வாழை, தென்னைகளை விவசாயிகள் நடத் தொடங்கினர். குறிப்பாக விளவங்கோடு தாலுகாவுக்கு உள்பட்ட எந்த பகுதியிலும் தற்போது நெல் விவசாயம் இல்லாத நிலையே காணப்படுகிறது. இங்குள்ள அனைத்து இடங்களிலும் முப்போகம் விளையக்கூடிய பாசன வசதி மிகுந்த பகுதிகளிலும், பணப்பயிரான ரப்பர் ஆக்ரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாசன வசதி இருந்தும் வயல்வெளிகளில் நெல் விவசாயம் காணாமல் போய் விட்டது. இந்த நிலையில் கல்குவாரியில் தண்ணீர் வசதியே இல்லாத பாறை மீது நெல் விவசாயம் செய்து, வருடத்தில் முப்போகம் அறுவடை செய்கிறார் விவசாயி ஒருவர். அருமனை அருகே ஐத்துள்ளி என்ற இடத்தில் எங்கு பார்த்தாலும் பாறைகளும், மீதி உள்ள இடங்களில் ரப்பர், தென்னை போன்றவைகளும் தான் அதிகமாக உள்ளன. இந்த இடத்தில் தனக்கு சொந்தமான பாறை பகுதியில் கல்குவாரி நடத்தி வந்தார் ராஜகுமார் என்ற விவசாயி. கடந்த சில வருடங்களாக கல்குவாரி செயல்படாத நிலையில் இருந்தது. இதையடுத்து சும்மா கிடக்கும் பாறைப் பகுதியில் ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டார்.

அதன்படி பாறை மீது மண்போட்டு நிரப்பினார். பின்னர் அந்த இடத்தில் நெல்விதை போட்டார். இதற்காக கொஞ்சம் தொலைவில் உள்ள நீரோடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நெல்லிற்கு பாய்ச்சினார். அத்துடன் பிளாஸ்டிக் டிரம்களில் தண்ணீர் தேக்கி, ேதவைக்கு இதிலிருந்தும் நெற்பயிருக்கு தெளித்து வந்தார். இந்த கடுமையான முயற்சிக்கு பெரும் பலன் கிடைத்தது. முதல் முறையிலேயே நல்ல விளைச்சலை கொடுத்தது. இது அவருக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியது. அதன்படி எப்போதாவது ஒரு முறை நெல்விவசாயம் என்பதை தவிர்த்து, வருடம் முழுவதும் செய்தால் என்ன என்ற எண்ணம் ராஜகுமாருக்கு தோன்றியது. இதையடுத்து 10 சென்டிலான பாறை மீதான விவசாய நில பரப்பை மேலும் 10 சென்டாக நீட்டிக்க தொடங்கினார்.

அதன்படி தற்போது மொத்தம் 20 சென்ட் நிலபரப்பில் விவசாயத்தை செய்து வருகிறார். இதுகுறித்து விவசாயி ராஜகுமார் கூறியது: கல்குவாரி செயல்பட்டு வந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல் விவசாயம் செய்ய தொடங்கினேன். பாறை மீது மண் நிரப்பி குழாய்மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிரை வளர செய்தேன். இதற்காக இயற்கை உரங்களை பயன்படுத்தினேன். நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. எங்களது தேவைக்கு போக அதிகமாவே நெல் கிடைக்கிறது. ஆகவே மீதியை விற்பனை செய்கிறேன். இயற்கை முறையில் பயிரிடுவதால் நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் தண்ணீர் வாய்ப்புள்ள இடங்களில் பணப் பயிர்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். நெல்லை இயற்கை முறையில் அனைவரும் பயிரிட வேண்டும். இதன் மூலம் நல்ல உணவும், நோயில்லாத வாழ்வும் கிடைக்கும் என்றார்.

Related Stories: