மதுரை அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி மக்கள் வாழ்விடமும் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மலையடிவாரத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் மதுரை பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு நடத்தினார். இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறிந்துள்ளனர். முனீஸ்வரன் கூறியதாவது: பேரையூர் மேற்குப்பகுதியில் கொப்பையா சுவாமி கோயிலின் மலை அடிவாரத்தில் கல்மேடு பகுதிகள், பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டன. அங்கு பெருங்கற்காலத்தில் தொடங்கி சங்க காலம் வரை 3 கட்டமாக வாழ்விடம் காணப்படுகிறது. புதைந்த நிலையில் சுமார் 30க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மேற்பரப்பில் உடைந்த நிலையிலும், புதைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக முதுமக்கள் தாழியின் உட்பகுதியின் கருப்பு சிவப்பு வண்ணத்திலான, மெல்லிய தடித்த பானை ஓடுகள் உடைந்த கல் வளையம் உள்ளது. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 84 செ.மீ விட்டம் 2 இஞ்ச் தடிமனில் உடையாத நிலையில் புதைந்து இருக்கிறது. மற்றொன்று இதைவிட சிறியதாக 60 செ.மீ விட்டத்திலும் ஒரு  இஞ்ச் தடிமனில் உடைந்த நிலையில் இருக்கிறது. தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதி தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் உள்ளன.

 

குறிப்பாக மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் முதுமக்கள் தாழியின் நடுவில் அகன்ற கருவுற்ற தாயின் வயிறு போன்று வைக்கப்படுகிறது. பெருங்கற்காலத்தில் ஆரம்பத்தில் இறந்தவரின் உடலை தங்கள் வாழ்விடத்திற்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள். அதை நரி, கழுகு மற்றும் மிருகங்கள் இரையாகக் கொண்டபின் அங்கு கிடைக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகளையும் தானியங்களையும் உள்ளே வைத்து மூடி ஆங்கில ‘வி’ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வர். பிற்காலத்தில் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த இடத்தின் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்து பாதுகாத்தனர்.

இப்பகுதியில் கிமு 1000 முதல் 300 வரையிலான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடான பகுதி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடம் காணப்படுகிறது. கல் மேடான பகுதியில்கட்டுமான வீடுகள் சிதைந்த நிலையிலும், அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள் கருப்பு சிவப்பு கலந்த பளபளப்பான நிறத்தில் மேற்பரப்பில் காணப்படுகின்றது. பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்திவாழ்ந்தற்கான சான்றாக இரும்புத்தாது கொண்டிருந்த கற்கள் எரிந்த குவியல் நிலையில் எச்சங்கள் காணப்படுகிறது. இரும்பு தயாரிப்பதற்காக சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழாய் சிதைந்து நிலையில் இருக்கிறது. பேரையூர் மலை அடிவாரப் பகுதியில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக உள்ளன. இதனை அகழாய்வு செய்வது தமிழர் வாழ்வியலின் அரிய பல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: