கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி

புதுடெல்லி: டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை:

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக்களிடையே வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதலில், கடந்த 4 நாட்களாக டெல்லியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் குழுக்கள் வடகிழக்கு டெல்லியின் சில  பகுதிகளில் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்து கொளுத்தி உள்ளன. ஒருவர் மீது ஒருவர் செங்கல், கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், சாலைகள் முழுவதும் கோர காட்சிகளாக காணப்படுகின்றன. டெல்லி காவல்துறை மற்றும்  மருத்துவமனை வட்டாரம் தெரிவித்த தகவலின்படி இன்று வரை ​​குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் துணை  ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அஜித் தோவல் ஆய்வு:

தொடர் கலவரத்தையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தார். முதலில் சீலம்பூரில் உள்ள டி.சி.பி (வடகிழக்கு) அலுவலகத்திற்கு சென்ற அவர், போலீஸ் கமிஷனர்கள்  வேத் பிரகாஷ் சூர்யா, அமுல்யா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு, வன்முறை மற்றும் தீ விபத்துக்குள்ளான பகுதிகளை தோவல் பார்வையிட்டார்.

அஜித் தோவல் பேட்டி:

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அஜித் தோவல், டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மக்களிடையே ஒற்றுமை உணர்வு இருக்கிறது, பகை இல்லை. ஒரு சில குற்றவாளிகள் இது போன்ற  செயல்களைச் செய்கிறார்கள் (வன்முறையை பரப்புகிறார்கள்), மக்கள் அவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். உள்துறை அமைச்சர் மற்றும்  பிரதமரின் உத்தரவின்படி நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிலைமையை சமாளிக்க உள்துறை அமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் என்றார்.

எனது செய்தி என்னவென்றால், தங்கள் நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் - தங்கள் சமுதாயத்தையும், அண்டை வீட்டாரையும் நேசிக்கிறார்கள். எல்லோரும் மற்றவர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் வாழ வேண்டும். மக்கள்  ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும், அவற்றை அதிகரிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

பாஜக 1 கோடி நிவாரணம்:

இந்த வன்முறையால் தலைமை காவலர் ரத்தன்லால் உள்பட 3 காவல்துறை அதிகாரிகள் பலியாகினர். மேலும் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி வன்முறையில்  உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். இதனைபோன்று, தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி  நிவாரணம் வழங்கப்படும். அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்பட உள்ளது என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக ரத்தன்லால் பணியாற்றி வந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: