வெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும்: டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ட்வீட்

இஸ்லாமாபாத்: வெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும் என டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். அதில், பல லட்சம் பேர் பேர் இருக்கும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடு இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா போன்ற ஒரு நாட்டை நாசி ஸ்டைல் அரசியல் செய்யும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வருகிறது. வெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும் போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும். பெரும் ரத்த வெள்ளத்தை ஓட வைக்கும்.

அதுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது. ஐநா பொதுக்கூட்டத்தில் கடந்த வருடம் நான் இதை பற்றி பேசி இருந்தேன். நான் என்னுடைய பேச்சில் கனித்தது போலவே இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது தொடக்கம்தான். இந்தியாவில் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் உடனே செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதே சமயம் நான் பாகிஸ்தானில் இருக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கிறேன். பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் அல்லாத குடிமகன்கள் அல்லது, அவர்களின் வழிபாட்டு தளங்களை தாக்க யாரும் எண்ண கூடாது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நமது சிறுபான்மையினர் இந்த நாட்டின் சம குடிமக்கள், என கூறியுள்ளார்.

Related Stories: