பாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: நாட்டை பாதுகாக்க எல்லை தாண்ட பாதுகாப்புப் படை தயங்குவதில்லை...ராஜ்நாத் சிங் டுவிட்

டெல்லி: எல்லை தாண்டி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தற்போது தயக்கம் காட்டுவதில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கடந்த வருடம் 2019 பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது  தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அரசு அரசியல், பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வரும் நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் கடந்த வருடம் இன்று  2019 பிப்ரவரி 26-ம் தேதி தாக்கி அழித்தன. அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள்  குண்டு வீசி அழித்தன. 1000 கிலோ வெடிகுண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை  நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்  கொண்டுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் தனது டுவிட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார். அதில், பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் முதல் ஆண்டு விழாவை இந்தியா இன்று கொண்டாடுகிறது. இது அச்சமற்ற @IAF_MCC  விமான வீரர்களால் தொடங்கப்பட்ட வெற்றிகரமான எதிர் பயங்கரவாத நடவடிக்கையாகும். பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் வெற்றியின் மூலம் இந்தியா  பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வலுவான விருப்பத்தை தெளிவாக நிரூபித்துள்ளது.

பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் போது காட்சிப்படுத்தப்பட்ட துணிச்சலுக்கும் தைரியத்துக்கும் @IAF_MCC-க்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.  பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசாங்கம் முந்தைய  அரசாங்கங்களிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கு துல்லியத் தாக்குதல், பாலாகோட் தாக்குதல் ஆகியவையே சான்று  என்று கூறியுள்ள அவர், நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தயங்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Stories: