×

கொரோனா வைரஸ் அபாயம்: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.  இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,715 ஆக உயர்ந்துள்ளது. 78,064க்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ள ஈரான், இத்தாலி, தென்கொரியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 322 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிலும் கொரோனா வைரஸ் காரணமாக 95 பாதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியர்கள் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் 14 நாட்கள் நோய்த்தடுப்பு தனிமைக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், சுகாதார அமைச்சக கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் +91-11-23978046 அல்லது ncov2019@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Indians ,South Korea ,Iran ,Italy ,Coronavirus Outbreak , Coronavirus, South Korea, Iran, Italy, Indians, Central Government,Travel Advisory
× RELATED கொரோனா வைரஸ் பீதியால் பின்னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம்