தேனி மாவட்டம் குரங்கணியில் மீண்டும் ஆபத்தான வகையில் மலையேற்றம்: வீடியோ வெளியானது

தேனி: தேனி மாவட்டம் குரங்கணியில் மீண்டும் ஆபத்தான வகையில் மலையேற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுற்றுலா பயணிகள் 23 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு ஆபத்தான மலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் மலையேற்ற பயிற்சிக்கு என்று ஒரேவொரு வழித்தடம் தான் உள்ளது. அதாவது குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான பகுதியாகும். இந்த பகுதியில் தற்போது காட்டுத்தீ அதிகளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த 15ம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் வனத்துறை தெரிவித்தது. இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி சுற்றுலா பயணிகள் கொலுக்குமலையில் இருந்து குரங்கணி நோக்கி அனுமதி இல்லாத பகுதியில் சென்று தீவிபத்தில் சிக்கி  23 பேரும் பலியாகினர்.

இதற்கடுத்தபடியாக அப்பகுதியில் உள்ள மலையேற்றத்திற்கு வனத்துறை சார்பாக பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது குரங்கணியில் இருந்து கொலுக்குமலை செல்லாமல் கேரளாவின் சூரியநெல்லி வழியே ரூபாய் 6 ஆயிரம் வரை பெற்று கொண்டு மலையேற்றத்திற்கு சுற்றுலா பயணிக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ள ஆபத்தான பாறைகள் மீது அமர்வது, ஆபத்தான இடங்களில் சுற்றுலா பயணிகள் சாகச செல்பி எடுப்பதால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் தேயிலை தோட்டத்தினர் பணம் பெற்று கொண்டு மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விதிகளை மீறி இதுபோன்று மலையேற்றம் மேற்கொள்வோருக்கு வனத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: