உத்தமபாளையம் டிஎஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில் அச்சுறுத்தும் கற்கள்: இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில், ஓரமாக வீசப்பட்டுள்ள கற்களால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் சாலைகளில் விபத்தை தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், சாலையோரங்களில் குடியிருப்பவர்கள் கடைகள் வைத்திருப்போர் வேகத்தடைகளுக்கு அருகில் கற்களை போட்டு இடையூறு செய்கின்றனர்.

இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையோரம் இருக்கும் கற்கள் தெரிவதில்லை. பல இடங்களில் கற்களின் மீது ஏறும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளன. இதை கண்காணித்து சாலைகளை பராமரிக்ககூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர், இளநிலை பொறியாளர், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் என யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. கற்களை சாலைகளின் ஓரமாக இருந்தால் ஆபத்துக்கள் வரும் என தெரிந்தும் இதனை அப்புறப்படுத்தாத நிலை தொடர்கிறது.

இது குறித்து உத்தமபாளையம் சமூகஆர்வலர் சலீம் கூறுகையில், வேகத்தடைகள் அமைக்கும்போது சிலர் தங்களது சுய நலத்திற்காக கற்களை போடுகின்றனர். பெரிய அளவில் குண்டுகற்களை சாலைகளின் ஓரமாக வைத்து விடுகின்றனர். இரவில் இது இருப்பதே தெரியாமல் ஒதுங்கி வரக்கூடிய அப்பாவிகள் கீழே விழுந்து உயிரை மாய்க்கும் அவலம் தொடர்கிறது. இதனை எதற்காக மாநிலநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்பது கேள்வியாக உள்ளது’ என்றார்.

Related Stories: